கண்ணீர் வணக்கங்கள்

கண்ணீர் வணக்கங்கள்

கண்ணீர் வணக்கங்கள்
ஈழத்து திரைப்பட இயக்குனரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை) இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய இயக்குனர், நண்பர் கேசவராஜா அவர்களுக்கு எனது ஈர அஞ்சலிகள்…..

ஆரம்பகாலமாக, 1992 ம் ஆண்டில் என்னோடு அறிமுகமாகி கடந்த சனிக்கிழமை வரை, நட்பில் இருந்தார்.

இன்று காலை படமாக இவர் முகநூலில்
வருவாரென சத்தியமாக உணரமுடியாமல்
உள்ளது.

ஏனெனில் சனிக்கிழமை பேசும்போதும்
சில சம்பவங்களை பற்றி ஆவேசமாக
பேசியதோடு, சில கலைஞர்களுக்கு
உங்கள் உதவித்திட்டத்தை செய்யுங்கள்
என்று, பெயர் விபரங்களையும், தந்திருந்தார.

இந்த ஒழுங்கமைப்பை நீங்களே செய்து
தாருங்கள் அனைவருக்கும் செய்யலாம்
கேட்போது சம்மதம் சொல்லிவிட்டு,
இப்படி சரிந்து விட்டார்.

ஈழ சினமாவின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவரான திரு. ந.கேசவராஜன் மறைந்துவிட்டார் என்ற துயர்பெருக்கும் தகவலை இன்று (2021-01-09) அறியமுடிந்தது. அன்னாருக்கு எனது அஞ்சலி.

ஒரு காலத்தில், நெருக்கமாக இருந்த ஒரு நண்பரை இழந்துவிட்டேன். அவருடனும் அவரது படைப்புகளுடனும் எனக்கு முரண்பாடுகள் அதிகமிருந்தன. அவரிலும் அவரது படைப்புகளிலும் நான் காணும் ‘குறைகளை’ அவ்வப்போது அவரிடமே சொல்லிவந்திருக்கிறேன். அண்மைக்காலத்தில் அவர் என்னுடன் உரையாடிய விதம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லையெனினும் வருத்தமளிப்பதாக இருந்தது. அவர் மீதான அன்பினாலும் நட்புணர்வினாலும், அவரது முரண்பாடான நடத்தைகள் குறித்துப் பொதுவெளியிலே பேசுவதைத் தவிர்த்து வந்தேன். அவர் வாழும் காலத்திலேயே அவர் பற்றி எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். ஈழ சினமாவில் அவரது பங்களிப்பு, விரிவாகப் பதிவுசெய்யப்படவும் நினைவுகூரப்படவும் வேண்டியது.

2021-01-09 அமரதாஸ்

கீழே, 2017-10-19 அன்று எழுதியது…

// கேசவராஜன் : ஒரு பதிவு – ஈழ சினமாவின் தவிர்க்க முடியாத முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர் திரு. ந.கேசவராஜன். போர்க்காலத்தில், பல்வேறு வசதியீனங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஈழ சினமாவிற்காக உழைத்தவர். அவரது முயற்சியில் பல திரைப்படங்களும் குறுந்திரைப்படங்களும் போர்க்காலத்தில் வெளிவந்திருக்கின்றன. அவர் எனது நீண்டகால நண்பர். விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய ‘நிதர்சனம்’ நிறுவனத்தின் வளர்ச்சியில் கணிசமான பங்கு அவருக்கு உண்டு. அவருக்கும் அவரது சக ‘நிதர்சனம்’ செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இருந்த பலமான உறவையும் சில முரண்களையும் ஓரளவு அறிந்திருக்கிறேன். மனதில் படுகிற எதையும் வெளிப்படையாகப் பேசுபவர். எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர். அவரது கஸ்ரங்களையும் மனவருத்தங்களையும் ஓரளவு நேரில் அறிந்திருக்கிறேன். ஒரு நெருக்கடியான காலத்தின் முக்கிய அனுபவங்களைக் கொண்டவர் கேசவராஜன். இறுதி யுத்த காலத்தில் ‘நிதர்சனம்’ சார்ந்த முக்கிய ஆவணங்களை, பொறுப்பானவரின் பணிப்பிற்கமைய அவர் எரிக்க நேர்ந்தது. அவரது வாழ்வில் அதுவொரு துயர நிகழ்வு. சந்திக்க நேர்கிற தருணங்களில், சினமா தொடர்பில் அதிகம் உரையாடியிருக்கிறோம். கருத்து ரீதியிலான முரண்பாடுகள் இருந்தாலும் நீண்டகால அன்பிலும் நட்பிலும் தொடர்ந்து பயணிக்கிறோம். ஈழ சினமாவில் அவரது பங்களிப்பு, விரிவாகப் பதிவுசெய்யப்படவும் நினைவுகூரப்படவும் வேண்டியது. அவரிடமும் யாரிடமும் இல்லாதிருந்த அவரது குறிப்பிடத்தகுந்த குறுந்திரைப்படம் ஒன்றினை (‘அப்பா வருவார்’) அண்மையில் கண்டுபிடித்துப் பதிவுசெய்திருக்கிறேன். சினமா சார்ந்த முக்கியமான பல தருணங்களில் அவரும் நானும், கூட இருந்திருக்கிறோம். யுத்த காலத்தில், வன்னிக்கு வந்து சென்ற சினமா சார் கலைஞர்களுடனான சந்திப்புகளின் போதும், ‘ஸ்கிரிப்ற் நெற்’ நிறுவனத்தினரின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றபோதும், ‘இறுதி யுத்தம்’ முடிந்த பிறகு, முதல் முறையாக சினமா சார் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக இயக்குநர் திரு. பிரசன்ன விதானகே யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும், கேசவராஜனும் நானும் கூட இருந்த நினைவுகள் இனிமையானவை. அவர் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் அண்மையில் ‘பனைமரக்காடு’ என்ற திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார். அது இனி வெளிவந்துவிடும். நண்பர் பிரசன்ன விதானகே இயக்கியுள்ள ‘அவள்’ என்ற புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேசவராஜன் நடித்திருக்கிறார். அது பற்றிய அனுபவங்களை அண்மையில் என்னுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். விடுதலைப் புலிகளுடனான போரில் சாவடைந்த சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் காதலியோடு அவர் தொலைபேசியில் உரையாட நேர்ந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது ‘அவள்’ திரைப்படம். அது இன்னமும் வெளியாகவில்லை. விரைவில் அது வெளிவரவுள்ளது. ‘இறுதி யுத்தம்’ முடிந்த பிறகு, நான் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியிருந்தபோது என்னிடம் அவர் வந்திருந்தார். அதன் பின்னர், தொலைவிலிருந்து அண்மையில் அவருடன் விரிவாகப் பல விடயங்கள் பற்றி உரையாட முடிந்தது. அவரது சினமா சார் பயணம் தொடர்வதில் ஒரு ஈழம் சினமா செயற்பாட்டாளனாக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்று அவரது பிறந்த நாள். அவருக்கு எனது இனிய வாழ்த்துகள்.

2017-10-19 அமரதாஸ் //

இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட SCRIPTNET என்னும் நிறுவனத்தின் திரைத்துறை சார் பயிற்சிப்பட்டறை, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அக் காலத்திலே இந்த ஒளிப்படம் பதிவாகியிருக்கிறது. இடம் : போரில் அழிந்துபோயிருக்கும் ஒரு திரையரங்கம். ஒளிப்படத்தில் இருப்பவர்கள் : நடுவில் அமர்ந்திருப்பவர் கேசவராஜன், சுவரில் அமர்ந்திருப்பவர் ஞானதாஸ், காமெராவுடன் நிற்பவர் அமரதாஸ், தொப்பியுடன் நிற்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த திரைக்கதைப் பயிற்சியாளர். ஏனையோர் பயிற்சிப்பட்டறையின் பங்கேற்பாளர்கள்.

இவரை பறிச்சொல்ல நிறைய இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button