NewsWorld

இலங்கை கம்பஹா – மஹர சிறையில் நடந்த துப்பாக்கிச் சூடு: 8 பேர் உயிரிழப்பு

இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு காயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களில் சுமார் 15 பேருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 பேரில், 48 பேருக்கு கொவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 26 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். எஞ்சிய கைதிகளுக்கு தொடர்ந்தும் கொவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை இன்று அதிகாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், அதிகாலை 5 மணியளவிலும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சிறையில் நடந்த துப்பாக்கிச் சூடு

சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், குறித்த பகுதி புகை மண்டலமாக காணப்படுகின்றது.

வன்முறைக்கு காரணம் என்ன?

சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.

மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் புதிதாக 183 கைதிகளுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு தடுத்து வைத்திருந்த கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது,

இவ்வாறு ஏற்பட்ட மோதலை அடுத்து, அதிகாரிகள் தமது குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நேற்றிரவு வேளையில் சிறைச்சாலைக்குள் தீ பரவ ஆரம்பித்திருந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

தொடர்ந்து கேட்ட துப்பாக்கிச் சத்தம்

நேற்றிரவு முதல் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும், இன்று அதிகாலை வேளையிலேயே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக இடைக்கிடை அதிகாலை வரை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இலங்கை சிறையில் நடந்த துப்பாக்கிச் சூடு

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மை காலமாக இவ்வாறான சில சில அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையிலேயே, மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் அமைதியின்மை வலுப்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button