
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து மிரள வைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை அவர் ஸ்டம்பிங் செய்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். சூர்யகுமார் தோனியின் வேகத்தை கண்டு திகைத்துப் போனார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியாகும். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை இழந்தது. அதன் பின் 3 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆடி வந்தனர். அவர்கள் விக்கெட்டை வீழ்த்துவது சிஎஸ்கே-வுக்கு சவாலாக இருந்தது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் நூர் அகமது வீசிய பந்தை அடிப்பதற்காக முன்னேறி வந்தார்.
ஆனால் பந்து வேறு பக்கமாக திரும்பியது. பந்தை பிடித்த தோனி 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சூர்யகுமார் யாதவும் இதை எதிர்பார்க்கவில்லை. நீண்ட நேரம் நான்காவது விக்கெட் விழாமல் இருந்த நிலையில் தோனியின் அசாத்திய திறமையால் சிஎஸ்கே அணிக்கு நான்காவது விக்கெட் கிடைத்தது.
அதன் பின் வரிசையாக மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.