
ரஷ்ய நாட்டு இராணுவத்தில் இணைக்கப்பட்ட இந்தியர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 16 பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் போச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,
“ரஷ்ய நாட்டு இராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 96 பேரை ரஷ்யா பணியில் இருந்து விடுவித்திருந்தது.

விடுவிக்கப்பட்ட அனைவரும் இந்தியா திரும்பியுள்ளனர். 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 18 பேர் தொடர்ந்தும் அங்கு இராணுவ பணியில் உள்ளனர். அதில் 16 பேர் எங்குள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அப்படித்தான் ரஷ்யா எங்களிடம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
அண்மையில் யுத்த களத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினிலின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் மொஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்” – என்றார்.
இதேவேளை, ரஷ்யா – உக்ரைன் இடையேயான யுத்தம் கடந்த 2022 இல் தொடங்கியது. இதில் உக்ரைன் இராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் இணைந்துள்ளனர்.

இந்தநிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இராணுவ உதவியாளர் என்றே அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றுவது கடந்த ஆண்டே இந்திய அரசுக்கு தெரியவந்தது. அதனையடுத்து அவர்களில் சிலரை இந்தியா விடுவித்துள்ளது. ஏனையவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது