இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் எனவும், பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் தரப்பினரும், தொழிற்சங்கங்களும் இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) இடம்பெற்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம், தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய மனோ கணேசன்,பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பதிப்புக்கள் முகங்கொடுத்துள்ளதோடு,காணி, வீட்டு உரிமையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
உலக உணவு தாபனம், செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் பெருந்தோட்ட மக்கள் இன்றும் பின்னடைந்த சமூகமாகவே வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் குறித்து கரிசணை கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் எம்முடன் இணக்கமாக செயற்பட்டார். கடந்த நாடாளுமன்றத்தில் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு பிரேரணையை நான் முன்வைத்தபோது அதனை அனுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார்.
ஆகவே மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய தேவையும் கிடையாது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கமைய பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்கம் 900 ரூபா சம்பள அதிகரிப்பையும் இடைக்கால அரசாங்கம் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்கியது.
இருப்பினும், 1,300 ரூபாவே கிடைக்கப் பெற்றது. ஆகவே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2,000 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறேன்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே அவர் இந்த 2,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த 2,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரிச் சலுகையாக வழங்கி இந்த சம்பள உயர்வை வழங்கும்படி அரசை கோருகிறேன். இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களான பெருந்தோட்ட மக்களை கைதூக்கி விடாமல் நாட்டில் உண்மை சமத்துவம் ஏற்பட முடியாது – என்றார்