இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும், தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.
இது இன்று (26) இலங்கையின் தென்பகுதியூடாக அம்பாந்தோட்டைக்கு அண்மையாக வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28 ஆம் திகதி அன்று புயலாக மாற்றம் பெறும்” என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.
வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.
இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.
ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.
அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம், மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.


எனவே இன்று(26) முதல்கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும்.
இந்த நிலைமை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடரும்.
இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28 முதல் 29 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மழையால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும்.
எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்” என்றார்.
மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
திருக் கார்த்திகை விளக்கீடு