இலங்கைவடக்கு மாகாணம்

மீண்டும் தோற்றது ஊர்காவற்றுறை பாதீடு:தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!

யாழ் .ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகின்றது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதற்கான விசேட அமர்வு இன்று (8)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில்
இடம்பெற்றது.

இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு
இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்காக இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.

இதன்போது எதிராக 8 வாக்குகளும், ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்றன.

அதன்காரணமாக நிலையில் பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும், தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும்,
தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏதுவான நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களது ஆதரவோடு ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சி, தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாட்டோடு ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தையும் கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை தம் வசப்படுத்தியிருந்தது.

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு எதிராக ஈ.பி.டி.பி 4 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 3 வாக்குகளையும், தமிழரசுக்கட்சி ஒரு வாக்கையும் செலுத்தின.

பாதீட்டுக்கு ஆதரவாக, ஆட்சியிலுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஓர் வாக்கும், உப தவிசளர் பதவியிலுள்ள தமிழசுக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற உறுப்பினரின் ஒரு வாக்கும் என 5 வாக்குகள் செலுத்தப்பட்டன.

இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button