
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”குட் பேட் அக்லி”. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அஜித்தின் பல்வேறு கெட்டப்புகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படத்தில் தனது பங்களிப்பை முடித்துக்கொடுத்த அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ‘அஜித் ரேஸிங்’ அணியை உருவாக்கியுள்ள அஜித் சமீபத்தில் துபாயில் நடந்த ரேஸில் ”அஜித்குமார் ரேஸிங்” அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல்லில் நடந்த ரேஸிலும் கலந்துகொண்டது அஜித் அணி.
வெற்றி பெற்ற பின்னர் அஜித் தனது அணியினருடன் இந்திய கொடியை ஏந்திவந்தார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் வெற்றிக் கோப்பையை காட்டிய அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
துபையைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் ரேசிங் அணி இத்தாலியில் மூன்றாம் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில் திரைத் துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கலைத்துறை பங்களிப்புக்காக நடிகர் அஜித்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.