
தென்கொரிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்புப் கோரியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி ஊடகங்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோரியுள்ளனர். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விமான நிறுவனம், அதன் இணையத் தளத்தை கறுப்பு நிறத்திற்கு மாற்றி நிகழ்நிலையில் (Online) மன்னிப்புக் கோரியுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
*தென்கொரிய ஜனாதிபதி நேரில் சென்று பார்வை*
இதேவேளை, தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடுவிபத்து இடம்பெற்ற முவானில் குறித்த பகுதியை “பேரிடர் மண்டலம்” என அறிவித்துள்ளார்.
*இறுதிக் குறுஞ்செய்தி*
தென்கொரிய விமான விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்தப் பயணி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?” என்று அந்த குறுந்தகவலில் காணப்பட்டுள்ளது.
அதன்பின்னர், விமானத்தில் இருந்த பயணியை தொடர்பு கொள்ள முடியவில்லை என குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.
*விமான விபத்து*
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த பயணிகள் விமானம் முவான் விமான நிலையத்தில் நேற்று (29) விபத்துக்குள்ளாகியிருந்தது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானமே விபத்துக்குள்ளாகியிருந்தது.
விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்திருந்தனர். இவர்களில் 179 பேர் உயிரிழந்திருந்தனர்.
பயணிகள் 175 பேரில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், இருவர் தாய்லாந்து நாட்டில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.