
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நாளையும்(14) நாளை(15) மறுதினமும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இதற்காக கடற்படையினரின் உதவியுடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது விடயம் தொடர்பாக இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு மேலும் கருத்துரைத்த அரச அதிபர் ம. பிரதீபன்,” இந்தியாவிலிருந்து இந்த முறை 3000 யாத்திரிகளும் இலங்கையிலிருந்து 4000 யாத்திரிகளும் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்காக நாளை(14) காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து நாளை காலை 5.00 மணி தொடக்கம் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக 1300 அறவிடப்படும்” – என்றார்