
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ் வருகையின்போது இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மட்டுமே பேசியுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ” ஜனாதிபதியின் இந்தச் செயல் எமக்கு கவலையளிக்கிறது. தேர்தலுக்கு முன் என்.பீ.பீ. கட்சி மீனவர்களது பிரச்சினை தொடர்பாக அதிகமாக பேசியது. ஆனால் ஜனாதிபதி யாழ் வந்தபோது இந்திய மீனவர்களது பிரச்சினை மாத்திரமே உள்ளது போல பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
இங்குள்ள உள்ளுர் மீன்பிடியில் பல சட்டவிரோத தடைசெய்யப்பட்ட முறைகள் உள்ளன. அதனை தீர்ப்பதாக தேர்தலின் முன் பேசினீர்கள். ஜனாதிபதியாகிய பின் உங்களது நிலைப்பாடு வேறாகவுள்ளது.
தடைசெய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகிறது. இது பற்றி பேச மறுப்பது ஏன்? இந்திய மீனவர்களின் பிரச்சினை மட்டுமே இருப்பதாக காட்டி சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதே உங்கள் நோக்கமாகவுள்ளதென நாம் சந்தேகப்படுகின்றோம்” என்றார்.