அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அமைச்சர், “அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையைத் மீளாய்வு செய்து அவசியமான முன்னுரிமைகள் மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு அதனுடன் இணைந்ததாக அத்தியாவசிய தேவைக் கமைய, நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000 வெற்றிடங்களும், பாதுகாப்பு அமைச்சில் 09 வெற்றிடங்களும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179 வெற்றிடங்களும், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132 வெற்றிடங்களும், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 வெற்றிடங்களும்,
போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161 வெற்றிடங்களும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519 வெற்றிடங்களும், மேல் மாகாண சபையில் 34 வெற்றிடங்களும், கிழக்கு மாகாண சபையில் 05 வெற்றிடங்களும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது” – என்றார்.