ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 242 இரு சக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த இருந்தனர். அதன்படி நேற்று இரவு 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பைக் வீலிங், ரேஸ் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கைப்பட்டு இருந்தது.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடிய மெரினா, எலியட்ஸ், சாந்தோம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் காவலர்கள், கண்காணிப்பு செய்தனர்.
திருவல்லிக்கேணி, அடையாறு, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, கோயம்பேடு, கொளத்தூர், கீழ்பாக்கம், புனித தோமையர் மலை, தியாகராய நகர், பூக்கடை, அண்ணா நகர் போன்ற 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் மதுரவாயல் பைபாஸ் சாலை, அடையாறு, நீலாங்கரை, தரமணி, ஜி.எஸ்.டி ரோடு, கிண்டி, துரைப்பாக்கம் போன்ற 425 இடங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டது.சாலைகளில் விதி மீறலில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, பைக்கில் வீலிங் செய்வது, பைக்கில் அதி வேகமாக செல்வது ஆகிய பொதுமக்களுக்கு இடையூறும் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் துறை அறிவித்து இருந்தது
சென்னையில் பைக் ரேஸ்; 242 வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டையொட்டி நேற்று இரவு சென்னையில் 425 இடங்களில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது மற்றும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.