JaffnaSri LankaWorld

யாழ்.மாநகரமும் – அதன் மக்களும்

யாழ்.மாநகரமும் – அதன் மக்களும்

கடந்த 17 ஆம் திகதி பொழிந்த சில மணிநேர மழையினால் யாழ்.பஸ்தரிப்பிட பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு காணப்பட்டது. காரணம் பூபாலசிங்கம் புத்தக சாலைக்கு முன்பாக உள்ள வடிகால் அடைபட்டு மழை நீர் ஓட முடியாமல் கடைகளுக்குள் சென்றது.

திடீர் என்று ஏற்பட்ட இவ் இடரினை உடனடியாக தீர்ப்பதற்கு இரண்டு சுகாதார தொழிலாளிகள் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள். அவர்கள் வடிகாலினை துப்பரவு செய்கின்ற சுகாதார தொழிலாளர்கள் அல்ல. இரவு நேரம் மாநகரத்தினை தூய்மைப்படுத்துகின்ற பணியாளர்கள். அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியினை மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட இவ் திடீர் இடரினைப் போக்குவதற்காக தங்களாகவே தம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

இரவு 7.30 மணியளவில் தொடங்கிய அவர்களது முயற்சி 12.30 மணிவரை தொடந்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அச் சிறிய வடிகாலுக்குள் நுழைந்து கணிசமான தூரம் வரை சென்று சீரான நீரோட்டத்திற்கான தடையினை நீக்கினார்கள். அவ் வெள்ள நீர் வடிந்தோட வழியமைத்துக் கொடுத்தனர்.

அவ் பணியினை செய்து முடித்த பிறகு ஒரு தூய்மைப்படுத்தல் பணியாளர் கூறினார். ‘வாய்கால் அடைபட்டு வெள்ளம் தேங்கிவிட்டது. நாளைக்கு மாநகர சபை தூங்கி விட்டாதா என்ன செய்கின்றது என்று எல்லாரும் எழுதுவாங்கள். அது மாநகர சபையில் சுகாதார தொழிலாளியாக இருக்கின்ற எனக்குத்தான் அவமானம். என்று கூறிக் கொண்டு அப் பணியினை முடித்து விட்டு வழமையான தன்னுடைய தூய்மைப்படுத்தல் பணியினை மேற்கொள்வதற்கு அவர் செல்லுகின்றபோது நேரம் இரவு 12.30.
இவ்வாறான அர்பணிப்பு மிக்க தன்னாலேயே இவ் மாநகரம் தூய்மைப்படுகின்றது அதை நானே செய்து முடிக்க வேண்டும் என்று ஊயிரோட்டத்துடன் பணிபுரிகின்ற பொறுப்புமிக்க தூய்மைப்படுத்தல் பணியாளர்களும் உள்ளனர் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

குறித்த வடிகால் அடைத்தமைக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய முறை தவறிய பழக்க வழக்கங்கள். அலட்சிய போக்குகள். இவ்வாறான தூய்மைப்படுத்தல் பணியாளர்கள் இந்த மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பொறுப்பற்ற தனத்தில் எறிந்து விட்டு செல்லும் கழிவுகளினை அகற்றுகின்றனர். ஆனால் நாம் இன்றும் இம் மாநாகரத்தை அசிங்கப் படுத்திக்கொண்டே இருக்கின்றோம்.

அன்று குறித்த வடிகாலினை அந்த சுகாதார பணியாளர்கள் துப்பரவு செய்து கொண்டு இருக்கையில் அவர்கள் துப்பரவு செய்கின்ற இடத்தில் இருந்து மிக அருகில் 20 மீற்றர் தொலைவில் ஒரு பொது மகன் வந்து அதே வடிகாலினுள் சிறுநீர் கழிக்கின்றார் என்றால் எந்த அளவுக்கு இருக்கின்றது ஒரு சிலரது பகுத்தறிவு என்பதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு தூய்மைப்படுத்தல் பணியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு குறித்த பணியாளர்கள் எடுத்துக் காட்டு ஒரு குடிமகன் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு குறித்த பொது மகன் எடுத்துக் காட்டு

எந்த ஒரு பிரதேசத்தின் தூய்மையும் அதன் சுகாதாரமும் அப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் செயல்களிலும் பழக்க வழங்கங்களிலும் தான் தங்கியிருக்கின்றது. வெறுமன மற்றவர்களில் மட்டும் குறை காணுவதை விடுத்து நாமே எம்மை திருத்திக் கொண்டு மற்றவர்களும் அதைப் பின்பற்றி திருத்துவற்கு இடமளிப்பதே சிறந்த ஒரு மாற்றத்தின் முதற் படி.

ஒரு பிரதேசத்தின் மக்களின் பழக்க வழக்கங்களும் அப் பிரதேசத்தின் தூய்மைப்படுத்தல் பணியாளர்களின் பணிகளும் சமாந்தரமான பாதையில் நகரும் போதே அப் பிரதேசத்தின் தூய்மை சாத்தியமாகும்.

மாநகரத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் எமக்குள்ள பொறுப்பையும் பற்றையும் விட பல மடங்கு பொறுப்புடன் காலம் அறிந்து நேரம் அறிந்து இடர் போக்க உழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள்.

வரதராஜன் பார்த்திபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button