JaffnaNewsPolitics

பதவிகளுக்கு ஆசைப்படாமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கும் எங்களைப் பலப்படுத்துங்கள்: கஜேந்திரகுமார் வேண்டுகோள்!

பதவிகளுக்கு ஆசைப்படாமல் கொள்கையில் உறுதியாக பயணிக்க கூடிய எம்மை பலப்படுத்துவது காலத்தின் கட்டாயமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம். ஏனைய எட்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை மதியத்திற்குள் தாக்கல் செய்வோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு முழுவதற்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய அத்தனை சபைகளுக்கும் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய பேரவை பேரவை என்ற பெயரில் எங்களுடைய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

இந்த முயற்சி கொள்கை அடிப்படையில் எங்கள் மட்டத்திலே ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக முன்னெடுக்கப்படுகிறது. எம்மைப் பொறுத்தவரையிலே கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிற்பாடு தமிழ் தேசிய அரசியலை பலப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவை தென்படுகின்றது.

அந்த வகையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பேச்சுவார்த்தைகளை தமிழ் அரசுக் கட்சி ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை முறித்தது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினுடைய தலைவரோடு நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தாலும் கூட அவருடைய அந்தக் கூட்டணி எங்களை தவிர்த்து தமிழ்த் தேசியத்துக்கு மாறாக செயற்பட்ட ஒரு சில தரப்புகளையும் சேர்த்து கூட்டணி முயற்சியொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் பின்னணியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்கியது உள்ளிட்ட சில குறிப்பிட்ட காரணங்களால் தமிழ் தேசிய கட்சி அதிருப்தி அடைந்து கொள்கை வழியிலேயே எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பினார்கள். நாங்களும் அதனை விரும்பினோம்.
ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியினுடைய உறுப்பினர்களும் எங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களும் தற்போது ஒன்றாக பயணிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.ஐங்கரநேசனுடைய தமிழ் தேசிய பசுமை இயக்கமும் எங்களுடன் இணைந்துள்ளார்கள்.

அதேபோன்று அருந்தவபாலன், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்திருந்தாலும் கூட அவரும் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தமிழ் தேசிய நிலைப்பாட்டில் ஒற்றுமையாக பயணிப்பதற்கு ஒரு முயற்சி ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையிலே எங்களுடைய இந்த முயற்சியோடு அவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று விருப்பத்தின் அடிப்படையில் நாங்கள் ஒரு கூட்டணியை ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சி எதிர்காலத்தில் பலமடையும் என்று நம்பிக்கையிலே நாங்கள் இருக்கின்றோம்.கொள்கை அடிப்படையில் இந்த முயற்சியை நாங்கள் முன்கொண்டு செல்வோம்.

இந்த கூட்டு முயற்சியை நாங்கள் எடுத்த பொழுதும் ஆசனங்களுக்கோ எண்ணிக்கைகளுக்கோ அடிபட்டு செயற்பட்டதாக இல்லை. மாறாக எந்தளவுக்கு இந்த பட்டியல் மக்கள் மட்டத்திலே நம்பிக்கையை ஏற்படுத்தலாமோ அந்த அடிப்படையிலே கொள்கையின் அடிப்படையில் உறுதியாக இருக்கக்கூடிய நேர்மையாக அரசியலில் பயணிக்க கூடியவர்களாகவும்,செயற்பாட்டு ரீதியாக மிக உறுதியாக கடந்த காலங்களில் செயற்பாடுகள் ஊடாக அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியிருக்கிறவர்களை சேர்த்துக் கொள்கின்ற நோக்கத்தோடு பெரும்பான்மையான விட்டுக் கொடுப்போடு இந்த பட்டியலை தயாரித்திருக்கின்றோம்.இந்த பட்டியல் விவரங்கள் வெளிவரும் போது அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு தமிழ் தேசியக் கொள்கையை காப்பாற்றுவதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டும் பல்வேறு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக தமிழ் அரசுக் கட்சி அந்த முயற்சியில் இருந்து விலகியது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் எங்களை விட்டுதமிழ் தேசியத்துக்குள் ஏற்கமுடியாத தரப்புகளுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்தனர். இந்த தரப்புகள் முழுக்க முழுக்க தேர்தல் அரசியலோடு மட்டும் தங்களுடைய நலன்களையும் தங்களுடைய அமைப்புகளின் நிலைமைகளை மட்டும் சிந்திக்கின்றதையே பார்க்கமுடிகிறது.

எதிர்காலத்திலாவது அவர்கள் திருந்தி கொள்கையின் அடிப்படையில் நேர்மையான பாதையை நிர்ப்பந்திக்க வைப்பதற்கு சைக்கிள் சின்னத்தில் போட்டி போடுகின்ற கொள்கையில் உறுதியாக செயல்படக்கூடிய அதே நேரம் மற்ற விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருக்கக்கூடிய, ஆசனம் பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாக பயணிக்க கூடிய எம்மை பலப்படுத்துவதன் காலத்தின் கட்டாயம்”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button