கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா..

இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஆனால், இவர்கள் இருவரும் தொடரின் முடிவில் தங்களின் கேப்டன் பதவியை இழப்பார்கள் என கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தான் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் இந்த மாற்றம் நடக்கும் எனவும் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் போதே ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டன் ஆவார் என்றும், ஒருநாள் அணியின் எதிர்கால கேப்டன் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், இடையே அவருக்கு காயம் ஏற்பட்டதால் அந்த நிலை மாறியது. தற்போது சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி வெற்றிகளை குவித்தாலும், அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்து இருக்கிறது. அதன் காரணமாக சூர்யகுமாரின் கேப்டன் பதவியை பறித்து, ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்க திட்டங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ அதிகாரிகள் ஆதரவு இருப்பதால் அவர் கேப்டன் பதவியை பிடிப்பார் எனவும், இடைப்பட்ட காலத்தில் துணை கேப்டனாகவோ, தற்காலிக கேப்டனாகவோ யார் நியமிக்கப்பட்டாலும் அவை அனைத்தும் இன்னும் சில மாதங்களில் மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அடுத்த சில மாதங்களுக்கு காயம் இன்றி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். அது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே சவால். அதை மட்டும் அவர் செய்துவிட்டால் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பதவிகள் ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்கும்.