
பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆன 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்று பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச உள்ளது.
இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் டாஸ் வென்றது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக மாறியது. பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற நிலையில் இந்த போட்டிக்கான பிட்ச் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தப் பிட்ச்சில் நேரம் செல்லச் செல்ல வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். சுழற் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் பிட்ச் ஒத்துழைக்காது. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி முதல் இன்னிங்க்ஸில் எளிதாக ரன் சேர்க்க முடியும். இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் இடம் பெற்று உள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களாகவும், நிதிஷ் குமார் ரெட்டி பகுதிநேர வேகப் பந்துவீச்சாளராகவும் இடம் பெற்று உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு ஸ்பின்னராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். இதில் சுந்தர் மற்றும் நிதிஷ் பேட்டிங்கிலும் கை கொடுப்பார்கள் என்பதால் இந்திய அணி எட்டு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா (பிளேயிங் லெவன்): கே எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்