இலங்கை விஜயத்தை நிறைவு செய்த இந்தியப் பிரதமர் நாடு திரும்பினார்!

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று(06) பிற்பகல் நாடு திரும்பினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முற்பகல் அனுராதபுரம் சென்றார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மாஹோ – அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பும் நவீனமயமாக்கப்பட்ட மாஹோ – ஓமந்தை ரயில் மார்க்கமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் (05) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பும் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கை – இந்தியாவிற்கு இடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன் வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலும் பிரதமர் மோடி ஈடுபட்டிருந்தார்.
ஐக்கிய இலங்கையில் தமிழ் சமூகத்தின் சமத்துவம், கௌரவம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான இந்தியாவின் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தாம் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது விஜயத்தின் போது மலையக மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
200 ஆண்டுகளுக்காக மேலாக இரு நாடுகளுக்கும் இடையே மலையக சமூகம் ஒரு உறவுப்பாலமாகத் திகழ்வதாக பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிக் கட்டமைப்புகள், திருக்கோணேஸ்வரம் மற்றும் சீதாஎலிய சீதையம்மன் ஆலயங்களின் நிர்மாணப்பணிகள் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகளும் நேற்றுமுன்தினம் (05) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாயக் களஞ்சிய கட்டடத்தொகுதி மற்றும் 5000 வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.
இலங்கைக்கான விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் மிக உயரிய விருதான ஶ்ரீ லங்கா மித்ர விபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.