மாதுரு ஓயா விமான விபத்து – விசாரணை ஆரம்பம்!

இலங்கை – மாதுரு ஓயாவில் பெல் 212 ரக விமானம் விபத்திற்குள்ளானமைக்கான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியுமென பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விபத்துத் தொடர்பான விசாரணைக்காக 9 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானம் மாதுரு ஓயா வில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் விமானப்படை மற்றும் இராணுவ வீரர்கள் 6 பேர் நேற்று முன்தினம் (09) உயிரிழந்தனர்.
2 விமானிகளும் 4 இராணுவ வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்தது.
நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த விமானப்படை மற்றும் இராணுவ வீரர்களின் உடல்கள் முதற்கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் இராணுவ சிறப்புப் படையைச் சேர்ந்த சார்ஜன்ட் துசித வர்ண, கோப்ரல் லக்மால் பெரேரா, கோப்ரல் பிரபாத் பிரேமரத்ன, கோப்ரல் விமுக்தி தசநாயக்க மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சார்ஜன்ட் சனத் உதய குமார மற்றும் கோப்ரல் மதுரங்க மெத்ருவன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.