JaffnaNewsSrilanka News

தமிழ்த் தேசியம் தடம்புரளாது அர்ப்பணிப்போடு செயற்பட்டவர் மாவை ஐயா- இளங்குமரன்!

 
தமிழ்த் தேசியம் தடம்புரளக்கூடாது என்பதற்காக அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயல்பட்டவர் மாவை சேனாதிராஜா ஐயா என  நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “மக்களுக்காக களமாடி சிறைச்சாலைகூடச் சென்றவர் அவர். இப்படியான ஒரு தலைவரின் இழப்பு  இலங்கை அரசியலுக்கு இழப்பாகும். குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்துக்கு அது பேரிழப்பாகும்.

இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றியவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 ஆம் ஆண்டு இணைந்து அன்று முதல் இறுதி மூச்சு இருக்கும்வரை தமிழரசுக் கட்சியுடன் பயணித்தவர்.

அவரது நேர்த்தியான, நேர்மையான அரசியல் பயணத்தால்தான் பாரம்பரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், தலைவர் ஆகிய பதவிகளை அவரால் வகிக்க முடிந்தது.

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.
மாவை சேனாதிராஜா ஐயாவின் பிரிவால் துயறுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button