முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று (18) காலை 6.30 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.
10.29 மணிக்கு நினைவொலி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்படவுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்,
“முள்ளிஏவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
தமிழின படுகொலையின் நாளாகிய மே18 தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் , இந்த அநீதிக்கு நீதி வேண்டியும் மே – 18 ஆம் நாள் இந்த திடலிலே ஒன்று கூட அழைத்து நிற்கின்றோம்.
கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்கின்ற அந்த விடயத்தை சர்வதேசம் வரை உரத்து சொல்ல இணைந்து கொள்வோம்” என்றார்.