பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில், 18 மாவட்டங்களில், 400 இடங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,” என, கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் சிறப்பு திட்ட அதிகாரி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும், 18 மாவட்டங்களில், 400 இடங்களுக்கும் மேல், ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு என, நான்கு பகுதிகளாக போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், மதுரை, விருதுநகர், தேனி, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார் ஆகிய மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கியில், எருது விடுதல், மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள், ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி, காவல் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணி துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றின் மேற்பார்வையில் கண்காணிக்கப்படும்.
ஜல்லிகட்டு போட்டிகளில் சாதியா? உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிகட்டுப் போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது என மதுரையில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர், ஜல்லிகட்டு கமிட்டியினர், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில் “ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், முன்பதிவுக்கும், களத்தில் வரும் காளைகளின் புகைப்படங்களுக்கு வேறுபாடுகள் உள்ளன, புகைப்படங்கள் மாற்றம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரில் காளைகளை அறிவிக்க கூடாது, காளை உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும்” என கூறினார்,மேலும், காளையின் வகை மற்றும் பூர்வீகம், காளையின் வயது, பல் வரிசைகள், காளை கொம்பின் நீளம், கொம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி, உயரம், நிறம், அடையாளங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட தரவுகளை, இணையதளத்தில் பதிவிட வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்க வைக்க, இவ்வாறு பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.