திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜன.10ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படு வதாக அம்மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை 31.12.2024 முதல் 9.01.2025ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும்,11.01.2025ஆம் தேதி முதல் 20.01.2025ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.
திருச்சியில் ஜன.10ம் தேதி உள்ளூர் விடுமுறை
அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் அந்த இடங்களில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் .
21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பண்டிகை
இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். பொங்கல் பண்டிகை வரை இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்காக ஸ்ரீரங்கத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின், கலெக்டர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில், ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில், தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கான அனுமதிச் சீட்டு, ஆன்லைன் மூலம் வழங்குவதா, நேரடியாக வழங்குவதா என்பது குறித்தும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கான பாஸ், ஸ்கேன் செய்து, ‘க்யூ ஆர் கோடு போட்டு வழங்கப்படுமா என்ற முழுமையான விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.