நட்டஈடு தேவையில்லை நீதியே வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று( 07) இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்துரைத்த சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி திருமதி ம.உதயச்சந்திரா, காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்திடம் (OMP) நாங்கள் ஒருபோதும் நட்ட ஈடு கோரவில்லை. கடந்த 15 வருடங்களாக நீதி கேட்டே நாங்கள் போராடி வருகிறோம். OMP இன் பொறிமுறையே உண்மையைக் கண்டறிதலாகும்.
ஆனால் அவர்கள் எங்களுக்கு நஷ்டயீட்டைக் கொடுக்க முனைகிறார்கள். அதனாலேயே OMP வேண்டாமென்று சொல்கிறோம். நாங்கள் கொடுத்த சாட்சிகளை கூட அவர்கள் தொலைத்து விட்டார்கள். நாங்கள் இன்று ஊடக சந்திப்புக்கு வரும் போது கூட புலனாய்வாளர்கள் விசாரிக்கிறார்கள் – என்றார்.
இதன்போது கருத்துரைத்த சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, ஒரு காலத்தில் தன் இனத்துக்கு எதிராகவே போராடி இன்று வெற்றி பெற்றுவந்திருக்கும் ஜனாதிபதிக்கு தெரியும் போராட்டம் ஒன்று எப்படி அமையும் என்று! வெட்டப்பட்ட புதைக்குழிக்குள் நாங்கள் சிக்காது இருக்க வேண்டும்- என்றார்.