முல்லை – கர்நாட்டுகேணியில் விபத்து: பாடசாலை மாணவி பலி!

முல்லைத்தீவு – கர்நாட்டுக்கேணி பகுதியில் பட்டா ரக வாகனம் மோதியதில் பாடசாலைச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் தரம் 3 இல் கல்விகற்கும் எட்டு வயதுடைய மாதீஸ்வரன் நர்மதா என்ற பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – கொக்கிளாய் – கருநாட்டுகேணி பகுதியில் இன்று(21) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிக்கொண்டு திரும்பியவேளை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதியை கொக்கிளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிவேகம் காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.