சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு!

யாழ் – அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்வின் போது இருந்து நேற்றுவரை 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து வெளியே மீட்க்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் எனவும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.
யாழ்- அரியாலை, சித்திப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது நேற்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்படுகிறது.
இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடித்து நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று முன்தினம் அனுமதி அளித்திருந்தார்.
45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீட்டை நேற்று சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீதவான் அனுமதித்துள்ளார்.
குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.