
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் யாழ்ப்பாண சேவை நிலையம் இலக்கம் 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று(11) திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு யாழ். சேவை நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் விருந்தினர்களாக, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் த.கிருஸ்னேந்திரன், யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சி.சந்திரசேகரன், தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனைக்கான காணி கொடையாளர் செல்வி தம்பு மகேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,”குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கிவரும் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவைகள் இன்னும் விரிவாக்கப்பட்டு தொடரவேண்டும்.
போருக்கு முன்னர் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனை மிகச் சிறப்பாக இயங்கியது. பின்னர் இடப்பெயர்வு காரணமாக அது செயலிழந்து போனது. மீண்டும் தெல்லிப்பழையில் இயங்கத் தொடங்கியிருந்தாலும் பல பிரச்சினைகளை மருத்துவமனை எதிர்கொண்டுள்ளது.
மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணர் ந.சரவணபவா, தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையோடு இணைந்த பின்னரே, அதன் சேவைகள் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. மக்களுக்கான சேவையை திறம்பட முன்னெடுக்கும் மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவை மக்கள் இன்றும் கடவுளுக்கு நிகராகவே பார்க்கின்றனர். அவரைப்போன்று மருத்துவர்கள் மாத்திரமல்ல, அதிகாரிகளும் சேவையாற்றவேண்டும்” – என்றார்.