
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வ.ந.நவரத்தினத்தின் 96 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ்.சாவகச்சேரி அறவழிப் பணிமனையில் இன்று(05) இடம்பெற்றது.
நினைவு சுடர் ஏற்றலோடு ஆரம்பமான நிகழ்வில், அறவழிப் போராட்டக் குழுவின் தலைவர் V.G. தங்கவேலு வரவேற்புரை நிகழ்த்த நவரத்தினம் நற்பணி மன்றத்தின் தலைவர் சங்கரன் தங்கராசா தலைமை உரை நிகழ்த்தினார்.
நினைவுப் பேருரை கனடா தமிழ் கல்லூரியின் அதிபர் வி.சு.துரைராஜா நிகழ்த்தினார்.
அமரர் நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
1960 மார்ச், 1960 ஜூலை, 1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1958 ஆண்டு இனக்கலவரங்களை அடுத்து நவரத்தினம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1958 ஜூன் 4 ஆம் திகதி சிறையிலடைக்கப்பட்டனர். 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தை நவரத்தினம் முன்னின்று நடத்தினார்.
1972 மே 14 இல் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தன.
தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1972 அக்டோபரில் தனது நாடாளுமன்ற இருக்கையைத் துறந்ததை அடுத்து நவரத்தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவரானார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நவரத்தினம் இருந்து செயல்பட்டார்.
1976 மே 21 இல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த போது நவரத்தினம் ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். செல்வநாயகம், பொன்னம்பலம் உட்படப் பல முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களது வழக்கை நடத்தில் 1977 பெப்ரவரி 10 இல் விடுதலை பெற்றுக் கொடுத்தனர்.
அதன்பின்னர் 1977 தேர்தலில் நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்.