NewsWorld

வீட்டை விற்றுவிட்டு.. அதே வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்!

புது உரிமையாளருக்கு தெரியாமல் 7 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜிங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஜாங் எனும் பெண்மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை விற்பதாக அறிவித்தார். சிலர் வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் விலை கட்டுபடியாகவில்லை. சரியான விலைக்காக ஜாங் காத்திருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு லீ என்பவருக்கு வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. பங்களா மாதிரி வீடு.. தோட்டம், மரங்கள், காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் வசதியுடன் இருப்பதால், வீட்டை ரூ.2.24 கோடி கொடுத்து வாங்கிக்கொள்வதாக கூறினார்.

பத்திரப்பதிவும் செய்யப்பட்டு அதே ஆண்டில் வீடு லீ கைக்கு மாறியது. லீ பரபரப்பான பிசினஸ் மேன். வீட்டில் இருக்கும் நேரம் குறைவுதான். எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் விடுமுறையில்தான் வீட்டில் அதிக நேரத்தை கழிப்பார். இப்படியே 7 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இவர் குடியிருக்கும் வீட்டில் இவருக்கே தெரியாமல் வேறு யாரோ இருப்பது போன்று அடிக்கடி தோன்றியிருக்கிறது. வித்தியாசமான சத்தங்கள், திடீர் வெளிச்சம் என அமானுஷ்யமாக நடந்திருக்கிறது. பேய் எதாவது இருக்கும் என்று யோசித்த லீ, அதை ஓட்டுவதற்கு சில விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் இதே பிரச்சனை. அவருடைய உள்ளுணர்வு, அவரை தவிர இங்கு வேறு யாரோ இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்து வேலையில் இறங்கியிருக்கிறார்.

வீடுதான் பெருசாச்சே.. எனவே சுத்தம் செய்யும் பணி 2-3 நாட்கள் வரை இழுத்திருக்கிறது. எல்லா அறைகளையும் சுத்தம் செய்த அவர், கடைசியாக தோட்டம் பக்கம் வந்திருக்கிறார். அங்கு ஒரு கழிவறை இருந்திருக்கிறது. இதுவரை அவர் அதை பயன்படுத்தியதில்லை. ஆனால் அதை சுத்தம் செய்து வைத்தால், நண்பர்கள் யாராவது வந்தால் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று யோசித்து கிளீன் செய்ய கழிவறை கதவை திறந்திருக்கிறார். அங்குதான் ஒரு டிவிஸ்ட் காத்திருந்திருக்கிறது.

தோட்டத்தில் இருந்தது உண்மையான கழிவறை கிடையாது. கதவுக்கு பின் ஒரு படிக்கட்டு செல்கிறது. இதை கொஞ்சம் கூட லீ எதிர்பார்க்கவே இல்லை. மனதில் பயம் ஒருபக்கம், மறுபுறம் இந்த படிக்கட்டு எங்கு போகிறது என்கிற கேள்வியும் இருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கட்டில் இறங்கியிருக்கிறார். அது ஒரு அறைக்கு அழைத்து சென்றது. அந்த அறை விசாலமாக, ஒரு ஆள் வசிப்பதற்கு ஏற்றார் போல இருந்திருக்கிறது. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்கான வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல அறையின் ஒரு மூளையில் மினி பார் இருந்திருக்கிறது. அங்கு உயர்தர சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த லீ-க்கு இந்த வீட்டில் பேய் இல்லை, வேறு யாரோ ஒரு ஆள் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டது. அறையை முழுமையாக சோதனையிட்டதில் மற்றொரு மூலையில்  இந்த வீட்டின் பழைய ஓனர் ஜாங் இருந்திருக்கிறார். இரண்டு பேரும் ஒருவரை பார்த்து ஒருவர் கத்த.. அந்த தெருவே அமர்க்களமாகியிருக்கிறது. 

லீ உடனடியாக ஜாங்கை வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே இது எனக்கு சொந்தமானது என்றும் ஜாங் வெளியே போக மறுத்திருக்கிறார். விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.

அங்கு நீதிபதி, லீ-க்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஜாங் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாள் இங்கு தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் சீனா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button