ஐனாதிபதி டுபாய் சென்றடைந்தார்!

ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உச்சி மாநாட்டில் (WGS) கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
நாளை முதல் (11) எதிர்வரும் 13 ஆம் திகதி வரை சர்வதேச உச்சி மாநாடு டுபாயில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று (10) பிற்பகல் ‘டுபாய் சேர்த்துச்’ விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயிலுள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலையில், மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.