நாட்டில் ஓரிரு தினங்களுக்கு மின் வெட்டு இருக்கும்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகள் சில செயலிழந்துள்ளமையால், நேற்று (10) மின்வெட்டை அமுல்படுத்தியமை போன்று இன்றும் (11) ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நேற்று முன்தினம் ( 09) ஏற்பட்ட முழு மின் தடையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மின்சார தடையுடனான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன.
இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை எட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை எட்டிய தீர்மானத்திற்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான கால எல்லைக்குள் ஒன்றரை மணிநேர மின் வெட்டு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.