
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 19 காளைகள் பிடிபட்டன.
பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (ஜன.14) ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று (ஜன.15) புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு என மொத்தம் 120 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.
பரிசோதனையின் போது அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
6 மாடுபிடி வீரர்களுக்கு காயம்

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் 6 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒன்பது காளைகள் உடலில் காயம், போலிச் சான்றிதழ் உள்ளிட்ட காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.