Tamilinfo

கொரோனா தடுப்பூசி: சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் பாதிப்பா? என்ன சொல்கிறது சீரம் நிறுவனம்?

கொரோனாவுக்கான ஆக்ஸ்ஃபோர்ட் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து சோதனையின் மூன்றாம் கட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தனக்கு நரம்பியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையான பின்விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், அவரது உடல்நல பாதிப்பிற்கும் தடுப்பு மருந்து சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறது சீரம் நிறுவனம்.

இது தொடர்பாக தன்னார்வலர் அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீஸில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சீரம் நிறுவனம் கடுமையாக மறுத்திருக்கிறது.

“இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், தவறானவை உள்நோக்கம் கொண்டவை. தன்னார்வலருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நல பிரச்னைகள் குறித்து இந்திய சீரம் நிறுவனம் கவலையடைகிறது. ஆனால், தடுப்பு மருந்து பரிசோதனைக்கும் இந்த உடல்நல குறைபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த தன்னார்வலர் தவறாக தடுப்பு மருந்து பரிசோதனை திட்டம் மீது குற்றம்சாட்டுகிறார்.

அவருக்கு வந்த உடல்நலக் கோளாறுகளுக்கும் தடுப்பு மருந்து சோதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அவரிடம் மருத்துவர்கள் அணி தெளிவாகத் தெரிவித்தது. இருந்தபோதும், அவர் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

பணம் வாங்கும் நோக்கத்துடனேயே இம்மாதிரி தவறான தகவல்களை அவர் பரப்புவதாகத் தெரிகிறது. ஆகவே, சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு, 100 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கோரவிருக்கிறது” என சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தன்னார்வலர்களுக்கு பரிசோதனை

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் 40 வயது தொழில் ஆலோசகர் ஒருவர், கொரோனா தடுப்பு மருந்துக்கான 3ஆம் கட்ட சோதனையில் பங்கேற்றார். இந்த சோதனையில் பங்கேற்ற பிறகு தனக்கு கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர், இந்திய சீரம் நிறுவனம், அஸ்ட்ராஸெனிகா, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து பரிசோதனையை நடத்தும் முதன்மை ஆய்வாளரான ஆண்ட்ரூ பொல்லார்ட், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு வழக்கறிஞர் மூலம் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடப்பதாகத் தெரிந்ததும் அதில் தன்னார்வத்துடன் பங்கேற்றதாக அந்தத் தன்னார்வலர் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து ஏற்கனவே பாதுகாப்பானது என கண்டறியப்பட்டிருப்பதாகவும் அதன் பாதுகாப்புத் தன்மையை மேலும் உறுதிப்படுத்த இந்திய வயது வந்தோரிடம் அதன் நோய்த் தடுப்புத் தன்மையை உறுதிப்படுத்த பரிசோதனை நடத்தப்படுவதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும் அந்த தன்னார்வலர் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியுள்ளார்.

மேலும், பரிசோதனை நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலருக்கு வழங்கப்பட்ட தகவல் தொகுப்பில், இந்த தடுப்பு மருந்து பிரிட்டனில் ஆரோக்கியமான நபர்களிடம் பரிசோதிக்கப்பட்டபோது பாதுகாப்பானதாக இருந்ததாகவும் தடுப்பாற்றல் வெளிப்பட்டதாகவும் இந்தியாவில் இதை பரிசோதிக்கவே தற்போது இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டிருந்ததது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தத் தகவல் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால், போட்டுக்கொண்ட இடத்தில் வலி, சிவந்து போதல், வீக்கம், காய்ச்சல், தலைசுற்றல், தலைவலி, சோர்வு போன்றவை ஏற்படலாம் என்றும் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டால் குணப்படுத்துவதற்காக அரை மணி நேரம் மருத்துவமனையிலேயே வைத்து மருத்துவர் கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரிசோதனைக்கு உடன்பட்ட தன்னார்வலர்

இதற்குப் பிறகு, அந்தத் தன்னார்வலர் செப்டம்பர் 29ஆம் தேதி தன்னிடம் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டார். அக்டோபர் 1ஆம் தேதியன்று அவருக்கு சோதனை தடுப்பூசி போடப்பட்டது.

இதற்குப் பிறகு நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை அந்தத் தன்னார்வலர் அனுப்பிய நோட்டீஸ் பின்வருமாறு விவரிக்கிறது: முதல் பத்து நாட்களுக்கு அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில், 11வது நாள் காலையில் எழுந்திருக்கும்போதே கடுமையான தலைவலியும் வாந்தியும் ஏற்பட்டன.

அவருடைய மனைவி கேட்ட கேள்விகளுக்கு அந்தத் தன்னார்வலர் பதிலளிக்கவில்லை. அருகில் வசிக்கும் மருத்துவரை அழைத்துக் கேட்டபோது, உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையைச் செய்யும்படி கூறியுள்ளார்.

அந்த தன்னார்வலருக்கு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. வெளிச்சம், சத்தம் போன்றவை அவருக்கு எரிச்சலூட்டியிருக்கின்றன. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதற்கு அடுத்த நாள் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். முதுகுத் தண்டிலிருந்து திரவம் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

மூன்றாவது நாள், அவரது மூளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஆனால், அவரது மனைவி சென்று பார்த்தபோது, தன்னார்வலரால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதற்கு அடுத்த நாள், மருத்துவர்கள் சூழ்ந்திருக்க தான் யார் என மலையாளத்தில் கேட்டபோது, தெரியவில்லை என பதிலளித்ததாக அவரது மனைவி தெரிவிக்கிறார்.

மனைவியை அடையாளம் காண இயலாமை

இதற்குப் பிறகு அக்டோபர் 18ஆம் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றபோதும் மனைவியை அவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவரது நடவடிக்கை மிகுந்த தீவிரத்தன்மையுடன், முரட்டுத்தனமாக இருந்தது. இதற்குப் பிறகு அக்டோபர் 20ஆம் தேதியன்று மனைவி ஆகியோரை அடையாளம் கண்டதையடுத்து அந்தத் தன்னார்வலர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார்.

அதற்கடுத்தடுத்த நாட்களில் நிலைமை சற்று மேம்பட்டது. 27ஆம் தேதிக்குப் பிறகு அவர் வீடு திரும்பிவிட்டாலும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது. எதிலும் கவனத்தைக் குவிக்க முடியவில்லை. பல தருணங்களில் ஆத்திரத்துடன் காணப்பட்டார்.

29ஆம் தேதியன்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு Acute Encephalopathy வருவதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லையெக் கூறியுள்ளனர். தற்போது அவரது நிலை மேம்பட்டிருக்கிறது என்றாலும் பாதிப்புகள் தொடருகின்றன என அவரது மனைவி தெரிவித்திருக்கிறார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது செய்யப்பட்ட எல்லா சோதனைகளிலும் அவருக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லையென்றே தெரியவந்திருப்பதாகவும் ஆகவே அக்டோபர் 1ஆம் தேதி கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்தின் பக்க விளைவாகவே இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகக் கருதுவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு, மருத்துவமனையிலிருந்தோ இந்த தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டிருந்த ஐசிஎம்ஆரிலிருந்தோ சீரம் இன்ஸ்ட்டிடியூட்டிலிருந்தோ அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், இந்த சோதனையில் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், சோதனையை தொடர்ந்து நடத்துவதும் விநியோகிப்பதற்காக மருந்தை தயாரிப்பது நடப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆகவே, இந்த மருந்து எல்லோருக்கும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும்வரை, இந்த மருந்தைத் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களை வெளியிட மறுக்கும் குடும்பம்

மருத்துவமனையிலிருந்து வெளிவந்து 18 நாட்களுக்குப் பிறகு செய்யப்பட்ட ஈஈஜி சோதனைகளில், அவருக்கு மூளை பாதிப்பு இருப்பது குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வளவு பாதிப்புகள் இருக்குமெனத் தெரிந்திருந்தால் அந்த தடுப்பூசி சோதனையில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் தருவதோடு, தடுப்பூசி சோதனையை நிறுத்த வேண்டுமென்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட தகவல்களைத் தவிர, வேறு எதையும் தெரிவிக்க அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை.

கோவிட் – 19க்கான ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பிரிட்டிஷ் – ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான சோதனைகளில் இந்திய சீரம் நிறுவனம் பங்கேற்றுள்ளது.

இதற்கு முன்பாக, செப்டம்பர் மாதத்தில் இந்த தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற சிலருக்கு விளக்கமுடியாத உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ஆஸ்ட்ரா ஸெனேகா இந்த சோதனைகளை நிறுத்தியது. இதையடுத்து இது தொடர்பான சோதனைகளை நிறுத்தும்படி சீரம் நிறுவனத்துக்கு செப்டம்பர் 11ஆம் தேதிவாக்கில் இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால், அடுத்த நான்கு நாட்களில் அதாவது செப்டம்பர் 15ஆம் தேதியே மீண்டும் சோதனைகளை நடத்த அனுமதி தரப்பட்டது.