PCID விசாரணைப் பிரிவு திறந்து வைப்பு!

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) நேற்று (20) திறக்கப்படவுள்ளது.

கொழும்பு – பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு, நேற்று காலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விதிகளுக்கு அமைய, விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் மூலம், சட்டவிரோதமாகப் பணம், சொத்து மற்றும் மூலதனங்களை ஈட்டியது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவுக்கு, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மூன்று வருட காலத்திற்கு இந்தப் பிரிவின் பணிப்பாளராக நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், இந்தப் பதவி நியமனம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசங்க கரவிட்ட , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி மோசடிக் குற்றப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுகிறார்.

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் மூலம், 34 அரச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, எந்தவவொரு முறையிலும் ஈட்டிய மூலதனங்கள் குறித்து விசாரணை நடத்த சட்டப்பூர்வமாக இந்தப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளதோடு,குற்றம் அல்லாத சொத்துகள் ஈட்டல் குறித்து சிவில் வழக்குகள் தாக்கல் செய்யும் சாத்தியக்கூறும் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொது மக்களும் இந்தப் பிரிவில் நேரடியாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.

சட்டப்பூர்வமற்ற முறையில் ஈட்டிய சொத்துக்களை 30 நாட்களுக்குள் தடை செய்ய அல்லது கையகப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version