சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவித்தார்.
யாழ்.சாவகச்சேரியில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பதவிகூட வெகு விரைவில் பறிக்கப்படலாம். அது அவருக்கும் தெரியும்.
எவரெவர் சிறிதரனோடு நின்று அவரது வெற்றிக்காக உழைத்தார்களோ, அவர்கள் எல்லோரையும் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். என்னையும் வெளியேற்றியுள்ளார்கள். இன்னும் 20 பேர் வரையில் வெளியேற்றப்படவும் இருக்கிறார்கள்.
தமிழரசு கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, பணம் பெற்றமை பற்றி ஊடகங்கள் முன் பேசியதால் வெளியேற்றப்பட்டார்.
சீ.வீ.விக்கினேஸ்வரன், அவர்களின் சொல்லை கேட்க மறுத்ததால் பதவி நீக்கப்பட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா,
உதயன் குழுமத் தலைவர் சரவணபவன், மகளிர் அணி தலைவியாக இருந்த விமலேஸ்வரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், புங்குடுதீவின் நாவலன், குணாளன், மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோரும் தற்போது கட்சியில் இல்லை.
அரிநேந்திரன், சங்குச் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டமைக்காக கட்சியால் விளக்கம் கோரப்பட்டு பதவி நீக்கப்பட்டார்.
ஆனால், சங்குக் கூட்டணியுடனும், சந்திரகுமாருடனும் இன்று கூட்டு வைத்திருக்கிறார்கள். தேசிய கட்சியிலிருந்து வந்தவர்கள் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அறிவாலும், ஆற்றலாலும், அனுபவத்தாலும் சிறந்தவர் ஆனால் அவரை புறந்தள்ளிவிட்டு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு வழங்கியிருப்பது பொருத்தமானது அல்ல.
சாணக்கியன் வேற்றுக் கட்சியிலிருந்து வந்தவர். அவரோ தற்போதுள்ள பதில் பொதுச் செயலாளரோ நேரடியாக கட்சிக்குள் வந்தவர்கள் அல்லர். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது உறுப்பினர்களாக கூட இருக்கவில்லை. மூலக்கிளையில் பதவி பெறுவதாக இருந்தால் குறைந்தது இரண்டு வருடங்களாவது உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எங்கேயோ இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். குறுக்கு வழியில் வந்தவர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஒரு மக்கள் கூட்டமே இருக்கிறது. ஆனால் அவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று தான் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெரியும், அது எங்களுக்கும் தெரியும். அவரோடு சேர்ந்து எவரெவர் நிக்கிறார்களோ அவர்களுடைய பெயர்கள் நீக்கல் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இப்படிப் போனால் ஆனந்த சங்கரி ஐயா, தமிழர் விடுதலைக் கூட்டணியை தனியாளாக நடத்துவதைப்போல, தமிழரசுக் கட்சியின் பதில் பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழரசுக் கட்சியை கொண்டு சென்று நிறுத்துவார்கள். தமிழரசுக் கட்சி ஒருபோதும் வீறுநடைபோடாது” – என்றார்.

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
அரச தொலைக்காட்சி முன்னாள் தலைவர், பணிப்பாளருக்கு விளக்கமறியல்!
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதை குழியைப் பார்வையிட,ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு நீதிமன்றம் அனுமதி!
எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!