பூமிக்கு திரும்பிய ஆர்டெமிஸ் இரண்டு விண்கலம்: பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கிய வீரர்கள்!

நிலவைச் சுற்றி வரும் தனது 10 நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரைக்கு அருகில் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை, ஓரியன் விண்கலம் கடலில் தரை இறங்கியது.

வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் பாதுகாப்பாக மேக மூட்டங்களுக்கு இடையே பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கியது.

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி. முர்தா கப்பல் மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தனர்.

நான்கு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக மீட்டனர்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி, ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 4 இலட்டத்து 6 ஆயிரத்து 771 கிலோ மீற்றர் தொலைவை எட்டியது.

இது 1970 இல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை முறியடித்து, மனிதர்கள் பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணித்த புதிய உலக சாதனையைப் பதிவு செய்தது.

இந்த 10 நாள் பயணத்தில் வீரர்கள் நிலவின் மேற்பரப்பை அவதானித்ததுடன், எதிர்கால நிலவுத் தளம் மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்குத் தேவையான பல முக்கிய சோதனைகளை மேற்கொண்டனர்.

ஆர்டெமிஸ் 2 இன் வெற்றியானது, 2028 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரை இறக்கத் திட்டமிட்டுள்ள ஆர்டெமிஸ் 3, திட்டத்திற்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது.

Exit mobile version