தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!

தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான, பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைந்து போகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், உயர்நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசர அடிப்படையில் அல்லாது, வெளிப்படையான பொதுக் காரணங்களோடு அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த முன்மொழிவிற்கு நீதித்துறை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சருடன் சந்திப்பு ஒன்றையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version