சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!

சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!

சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால் வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய காதலனும், அதனை வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் ஹொரணைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை – கொடகவெல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய காதலனும், 63 வயதுடைய நகைக்கடை வியாபாரியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஹொரணை, கனன்விலவைச் சேர்ந்த யுவதியுடன் சந்தேக நபர் காதல் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக இளம் பெண்ணின் தந்தை ஹொரணைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு ​​மகளின் காதலன் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலனே இந்த திருட்டைச் செய்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்க நகைகள் கொடகவெல மற்றும் ஹொரணைப் பகுதிகளிலுள்ள நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டமை தெரியவந்தது.

திருடப்பட்ட தங்க நகைகளில் ஒரு தங்க சங்கிலி, காதணிகள், ஒரு வளையல், மோதிரங்கள் மற்றும் ஒரு பென்டன் ஆகியவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version