ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டிப் போராட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி நேற்று(25) போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்த போராட்டம், நகரமண்டபம் வரை பேரணியாகச் சென்றது.

இந்தப் போராட்டத்தில், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அதிகாலை நத்தார் நள்ளிரவுத் திருப்பலியில் ஈடுபட்டிருந்தபோது மட்டக்களப்பு புனித மேரி பேராலயத்தில் வைத்து ஆயுத்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதலில் இவரது மனைவியார் உட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்திருந்தனர்.

இவரது இறப்பிற்குப் பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகளால் இவருக்குத் தமிழினத்தின் உயரிய கௌரவமான ‘மாமனிதர்’ விருது வழங்கப்பட்டது.

யோசப் பரராஜசிங்கம் 1934 நவம்பர் 26 ஆம் திகதி பிறந்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.

1990 முதல் 2004 வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் 2004 முதல் தனது மறைவு வரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்த ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பில் வளர்ந்தார். தனது அரசியல் வாழ்வை 1952 இல் தமிழரசுக் கட்சியுடன் தொடங்கினார்.

அரசியலுக்கு வருவதற்கு முன் மட்டக்களப்பு செயலகத்தில் வரைவாளராகவும், ‘தினபதி’ நாளிதழில் பகுதிநேர ஊடகவியலாளராகவும் பணியாற்றியிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, குறிப்பாக காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் சித்திரவதைகளை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.

Exit mobile version