ஆட்டக்காரியை பிராந்திய நெல்லினமாக’ பரிந்துரைக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய ‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை ‘பிராந்திய நெல்லினமாக’ உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(25) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய ‘ஆட்டக்காரி’ நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால்,

அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆட்டக்காரியை ஒரு ‘பிராந்திய நெல்லினமாக’ உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக, வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் உறுதியளித்தார்.

அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஊடான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும், நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்,

பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மையப்படுத்திய ‘தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்தை’ முழுமையாக இயங்கச் செய்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

குறிப்பாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் வாழைக் கன்றுகள் ஊடாக ‘பனாமா’ போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமுள்ளதால் சுங்க அதிகாரிகளோடு இணைந்து கடுமையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும்,

ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவாகச் சான்றிதழ்களை வழங்குவதற்குமான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version