சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிவாயுவை திறம்பட விநியோகிக்க நடவடிக்கை!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, எரிவாயு விநியோகம் தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 7 ஆயிரம் மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த எரிவாயு கையிருப்பை நுகர்வோர் பயன்பாட்டிற்காக இன்று முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் வர்த்தகர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுதல் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதல் போன்ற சட்டவிரோதச் செயல்களைக் கண்காணிக்க பொலிஸார் மற்றும் அதிகார சபையின் புலனாய்வுப் பிரிவினர் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version