இலங்கைவடக்கு மாகாணம்
Trending

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க போதை ஒழிப்பு காலத்தின் தேவை!

“பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.வடமராட்சி கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும், பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் இன்று(08) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “உங்கள் பாடசாலை இந்தப் பிரதேசத்தில் நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சிறப்புப் பெற்ற கல்வி நிலையமாக திகழ்கின்றது. நான் பல இடங்களில் வலியுறுத்தும் செய்தி ஒன்றே — எந்த நிறுவனத்தின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அதன் தலைமைத்துவத்தைச் சார்ந்தே அமைகின்றது.

இந்தப் பாடசாலையின் தற்போதைய அதிபர் சிறந்த தலைமைத்துவத்துடன் பாடசாலை நிர்வாகத்தை முன்னெடுத்து வருகிறார் என்பதை, இந்தப் பாடசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பே சான்றாக அமைகிறது.

மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. நாளைய சமூகத்திலும் அரசியல், நிர்வாக, கல்வி மற்றும் பிற துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கப் போவது நீங்கள் தான்.

ஆனால் இன்று பல இடங்களில் தலைமைத்துவ குறைபாடு காரணமாக மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன.

செய்யத்தக்க ஒன்றைச் செய்யாமல் காரணம் கூறுவோர் அதிகம். நேர்மையான சிந்தனை, பிறருக்கு உதவுதல், பொறுப்பு உணர்வு போன்ற பண்புகள் பல இடங்களில் குறைவாகத் தெரிவதைக் காண்கிறோம்.

ஆகையால், கல்வியில் முன்னேறுவதோடு சேர்த்து உயர்ந்த மனிதப்பண்புகள் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நீங்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக திகழ்வீர்கள்” – என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button