வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான துறைசார் வல்லுநர்களின் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் காணப்படும் இடர்பாடுகள், அவற்றை தீர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் வல்லுநர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், வடக்கு மாகாண பாடசாலைகளின் மாணவர்கள் வரவு, பாடரீதியாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நகரப்புற பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் நகரப்புற பாடசாலைகளில் வகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக எதிர்வரும் வாரத்தில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், வடக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளர்களான உதயகுமார் மற்றும் ஜோன் குயின்டஸ், எந்திரி சூரியசேகரம், கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர், மறவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்




