
உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, 27ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
2024/2025 நிதியாண்டில் இலங்கையின் மிகச்சிறந்த ஏற்றுமதியாளர்களைப் பாராட்டும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த விழாவில், மொத்தமாக 15 விருதுகளும், உற்பத்தி மற்றும் சேவைத் துறை சார்ந்த 92 விருதுகளும் உட்பட 107 விருதுகள் வழங்கப்பட்டன.
விண்ணப்பதாரர்களின் செயல்திறன் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான ஏற்றுமதிப் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடைய பிரிவுகளுக்கான தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஏற்றுமதிச் சந்தை பல்வகைப்படுத்தல், தொழில் உருவாக்கம், ஏற்றுமதி வருமான வளர்ச்சி, ஏற்றுமதி வருமானத்தை நாட்டிற்குள் கொண்டுவருதல், சுற்றாடல் நிலைத்தன்மை மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு, கூட்டு மதிப்பை அதிகரித்தல் (Value Addition) உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் விருது பெற தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விழாவில் மேலும் உரையாற்றிய பிரதமர்,
“ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது விழாவானது, கொள்கைகள் அல்லது நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது, உற்பத்தி செய்தல், பெறுமதியை ஏற்படுத்துதல், மற்றும் சர்வதேச ரீதியில் போட்டியிடும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இலங்கையின் முன்னேற்றம் தங்கியுள்ளது என்பதை நினைவூட்டுகின்றது.
கடந்த வருடத்தில் நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். அதனால் உலகச் சந்தை, விநியோகச் சங்கிலிகளில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது, இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. இதனால் பல ஏற்றுமதியாளர்களுக்கு மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள நேர்ந்தது, அத்தோடு உற்பத்திச் செயல்முறைகளை மீள் ஒழுங்கமைக்கவும், வாடிக்கையாளர்களைப் பல்வகைப்படுத்தவும், சந்தையில் போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்லவும் நேர்ந்தது.
‘திட்வா’ சூறாவளியின் தாக்கத்தினாலும் ஏற்றுமதித் துறையின் பல கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள உற்பத்தி நிலையங்கள், களஞ்சிய வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியன சேதமடைந்தன.உற்பத்திச் சங்கிலிகளுக்கும் மற்றும் விநியோக அட்டவணைகளுக்கும் இடையூறு ஏற்பட்டன.
இத்தகைய கடினமான சூழ்நிலைகளின் கீழ் சர்வதேச ஏற்றுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வேளையில், சில ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள்.
திடீர் அனர்த்தத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், அவர்களின் செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அவர்கள் மீண்டும் எழுச்சிபெறுவதற்கும் அரசாங்கம் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இயற்கை அனர்த்தங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்துவதற்கும், அத்தகைய நிலைமைகள் மீண்டும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலவிய ஸ்திரமின்மை, கொள்கை முரண்பாடுகள் மற்றும் நிர்வாகச் செயற்திறனின்மை காரணமாக நாடு பின்தங்கியிருந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருந்ததோடு, வர்த்தகர்களுக்கு எதிர்காலத் திட்டங்களை வகுப்பதும் கடினமானது.
ஆயினும், தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் நிர்வாகத்தின் அடிப்படையில் செயற்படுகிறது. இது குறுகிய கால அணுகுமுறை அல்ல. நாடு நிச்சயமற்ற நிலைக்கு மீண்டும் செல்லாத ஒரு நீண்ட காலச் செயன்முறையாகும்.
இதற்காக அரசாங்கம் வலுவான நிதி முகாமைத்துவம், எதிர்வு கூறக்கூடிய கொள்கைகள், தெளிவான மற்றும் எளிய விதிமுறைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், முக்கிய நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் புதிய சீர்திருத்தங்கள், வர்த்தகங்கள் எதிர்காலத் திட்டங்களை வகுக்கக்கூடிய, முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய மற்றும் தேவையற்ற தடைகள் குறைக்கப்படும், தனியார் துறையின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேசியச் செலவினங்களைப் பேணுவதற்காக நாம் நீண்டகாலமாகச் சர்வதேசக் கடன்களையே பெரிதும் நம்பியிருந்தோம். ஆனால், உறுதியான எதிர்காலத்திற்கு அந்த முறைமை தவறான வழியாகும்.
எமது முன்னேற்றம் என்பது வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தொடர்புகள், ஈடுபாடு ஆகியன மூலம் எம்மால் ஈட்டிக்கொள்ளக்கூடிய திறனிலேயே தங்கியிருக்கின்றது.
இலங்கையின் நிபுணத்துவத்தையும் ஆக்கத்திறனையும் உலகிற்குக் கொண்டுச் செல்லும் உங்களின் திறன் முழு நாட்டிற்கும் பலமாகும். அதற்கான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
கொள்கை முரண்பாடுகள், செயற்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கும் தாமதங்கள், போட்டித்தன்மை மிக்க நிதி வசதிக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் குறைபாடுகள், வர்த்தக வசதிகளிலுள்ள குறைபாடுகள், சந்தை அணுகலை விரிவாக்குவதிலுள்ள மந்தமான முன்னேற்றம் ஆகிய விடயங்கள் உங்களைப் பாதித்துள்ளதை நாம் அறிவோம். இந்தச் சிக்கல்களை அரசாங்கம் நேரடியாகக் கையாளும் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்.
வினைத்திறன் மிக்க, வெளிப்படையான மற்றும் எதிர்வு கூறக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறைகள், முதலீட்டு அங்கீகாரங்கள் மற்றும் ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்துவதற்கும், அத்துடன் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் பூகோளச் சந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவகிறது” – என்றார்.
கைத்தொழில், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,அமைச்சர்களான குமார ஜயகொடி, இராமலிங்கம் சந்திரசேகரன், சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, எரங்க வீரரத்ன, அருண் ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர, முதித ஹன்சக்க விஜயமுனி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க ஆகியோரும், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் உட்படப் பெருமளவானோரும் கலந்துகொண்டிருந்தனர்.



