அனர்த்த நிவாரண நிதியில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – யாழ் அரச அதிபர்!

வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25,000 ரூபா கொடுப்பனவு முறைகளில் முறைகேடுகளோ, குளறுபடிகளோ, ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மாதம் 30 திகதி தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக 365.6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டெழச் செய்வதற்காக பாதிப்புக்களின் அடிப்படையிலே பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் 12,108 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கிராம அலுவலகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தலின் மூலம் பயனாளிகளின் விண்ணப்ப படிவங்கள் பூரணப்படுத்தப்பட்டு அவர்களின் உறுதிப்படுத்தலின் மூலம் 25000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கின்றது ” – என்றார்.



