விநாயக சஷ்டி விரதம் எனப்படும் பெருங்கதை விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் மிகவும் சிறப்பான ஒரு விரதமாகும்.
இதை பெருங்கதை, பிள்ளையார் கதை, விநாயகர் விரதம் எனவும் அழைப்பர்கள்.

இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படுகிறது.
இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதனம் செய்வார்கள்.
முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும்.

இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாள் காலையில் பாறணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபாகும்.
ஈழத்திலுள்ள விநாயகர் ஆலயங்களில் இந்த விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.



