இலங்கைவடக்கு மாகாணம்

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது தொழில் முனைவோராகவும் மாறவேண்டும் – வடக்கு ஆளுநர்!

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா லிமிடெட் (Agro Benefit Lanka Limited – ABL) ஆகியவற்றுக்கு இடையிலான முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(12)மாலை நடைபெற்றது.

புத்தூரில் அமைந்துள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வாழை மற்றும் மாம்பழ சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை அவர்களுக்கான முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்காகக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை நான் முன்னெடுத்து வந்துள்ளேன்.

அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இன்றைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அமைந்துள்ளது.

இது ஒரு பரீட்சார்த்தமான மற்றும் முன்னோடியான முயற்சியாகும். இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வது விவசாயிகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

உற்பத்திப் பொருட்களின் தரத்தைப் பேணுவதன் மூலமும், தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதன் மூலமும் இத்திட்டத்தை நாம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும்” என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button