
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்ளுள் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் மனவருத்தத்தை ஈ.பி.டி.பி. வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்.இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்று(16) நேரில் சந்தித்த ஈ.பி.டி.பி. இன் முக்கியஸ்தர்கள் இந்த மனக்கவலையை வெளிப்படுத்தினர்.
இந்தச் சந்திப்பு இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.
இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி அக்காலப் பகுதியில் கரிசனை காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, 50,000 வீட்டுத் திட்டம், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வடகடல் நிறுவனத்தின் குருநகர் வலை தொழிற்சாலை, பனை அபிவிருத்தி ஆராட்சி நிலையம், வடக்கிற்கான புகையிரத தண்டவாளம், உழவு இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களை யாழ் துணைத் தூதரலாயத்தின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தியமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான பின்னணியில், எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி. சார்பில், கட்சியின் ஆலோசகரும் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான எஸ்.தவராசா, கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும், பேச்சாளருமான சிறீரங்கேஸ்ரன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.