கொடிகாமம் ஆத்தியடி வீதி மக்கள் இடைத்தங்கல் முகாமில் போராட்டத்தில்!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மத்தி, ஆத்தியடி வீதியிலுள்ள மக்கள் இன்று(20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கையின் போது கொடிகாமம் மத்தி ஆத்தியடி வீதியிலுள்ள கிராமம் நேற்றிரவு (19) நீரில் மூழ்கியது.

நீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக தங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படவில்லை எனவும், அதன் காரணமாக நேற்றிரவு(19) வெள்ளம் குடியிருப்புக்குள் நிறைந்ததால் திடீர் அச்சம் அடைந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனையடுத்து நேற்றிரவு சம்பவ இடத்திற்கு வருகைதந்த தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அனர்த்த நிலைமைகளை ஆராய்ந்ததோடு உடனடி உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிபுரி விடுத்திருந்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வருடம் தோறும் இவ்வாறான வெள்ளப்பெருக்கால் தாங்கள் தொடர்ச்சியாக இடம் பெயர்வதாக தெரிவித்தும், தங்களின் பிரதேச வீதிகளுக்கு வெள்ளம் வடிந்தோடக்கூடியவாறான வடிகால் அமைப்பை சரியான முறையில் அமைத்துத்தருமாறும் வலியுறுத்தி இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்கள் இடைத்தங்கல் முகாம் வளாகத்தில் இன்று(20) பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version