நடைமுறைக்கு செல்ல முயற்சிக்கும் பூகோள அரசியல்!

– அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் –

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒரு குழுவாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருக்கின்றது. இக்குழுவில் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த கட்சிகளில் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மட்டும் பங்குபற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கமும், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராஜாவும் சுகவீனம் காரணமாக பங்கு பற்றவில்லை.

இந்தப் பயணத்திற்கான ஒழுங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஊடாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனே மேற்கொண்டிருந்தார்.

தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் 1970களில் ஆரம்பத்தில் குழுவாக பயணம் செய்து தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்த பின்னர் குழுவாக சந்தித்தமை இந்தத் தடவையே ஆகும்.
தந்தை செல்வா தலைமையிலான குழுவின் பயணத்திற்கும், கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவின் பயணத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன.

தமிழ்நாட்டின் கட்சி அரசியலுக்குள் மாட்டுப்படாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்துள்ளனர். அனைவரிiயேயும் பொதுவான கோரிக்கைகளையே முன்வைத்தனர். பிரதான கோரிக்கை சமஸ்டி ஆட்சி முறைக்கு ஆட்சி அளிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தடைவ மேலதிகமாக தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றியும் உரையாடியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி நாம் தமிழர் இயக்கம், திராவிடர் கழகம், பாரதீயஜனதாக்கட்சி என்பன சந்தித்த கட்சிகளில் முக்கியமானவையாகும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோவும், தமிழீழ ஆதரவாளர் நெடுமாறனும் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இம்மறுப்புக்கு புலம்பெயர் தமிழர் சிலரின் தூண்டுதல்கள் காரணமாக இருக்கலாம்.

சமஸ்டியை முன்வைப்பதனால் தமிழீழக் கோரிக்கை பலவீனப்பட்டுவிடும் என்ற கருத்து புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருக்கின்றது. வலைத்தளங்களிலும் இது பற்றிய கருத்துக்கள் வந்திருக்கின்றன.
இச்சந்திப்புக்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்தமையே முக்கியமானதாகும்.

அண்மைக்காலமாக ஈழத் தமிழர் விவகாரத்திலிருந்து சற்று விலகிய போக்கே ஸ்டாலினிடம் காணப்பட்டது. நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஸ்டாலின் எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை. தாயகத்தில் ஒரு தேக்க நிலை இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். தி.மு.க மட்டுமல்ல ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்தன.

சீமானின் “நாம் தமிழர் இயக்கம்” மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.ஸ்டாலினைச் சந்திக்க முடிந்தமைக்கு திருமாவளவனே பிரதான காரணமாவார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதால் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்யக்கூடியதாக இருந்தது. இதற்கு முன்னர் சுமந்திரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சென்றபோதும் ஸ்டாலினை சந்தித்து உரையாட முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகவே சந்திக்க முடிந்தது. கனிமொழியுடன் மட்டும் சந்தித்து உரையாட அவர்களினால் முடிந்தது.

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வர இருப்பதால் அதுவும் சந்திப்பை சாத்தியப்படுத்தியிருக்கலாம். இது விடயத்தில் திருமாவளவனுக்கு தமிழ் மக்கள் நன்றி கூறியேயாக வேண்டும். அவர் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்தபோது இக்கட்டுரையாளரும் அவரை சந்தித்திருந்தார். அவரிடம் ஈழத் தமிழர் – தமிழ்நாடு உறவை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் என கூட்டாக நாம் கோரிக்கை விடுத்தோம். உடனடியாக அதை செய்வதாக அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை வாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த அவர் வடமராட்சியின் கிராமங்கள் தோறும் நடந்து சென்று பனம் விதைகளை நாட்டினார்.தமிழ் இளைஞர்களுடனும் மனம் திறந்து உரையாடினார். “நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கின்றோம். நீங்கள் இங்கு ஒற்றுமையாக குரல் கொடுங்கள்” என தமிழ் இளைஞர்களிடம் கூறினார்.

சந்திப்புகளின் போது கஜேந்திரகுமார் மத்திய அரசினையும் பகைக்காமல், தமிழ்நாட்டு மக்களையும் பகைக்காமல் நிதானமாக கருத்துக்களை முன்வைத்தார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூறுகின்ற போதும் அதன் விளைவான 13வது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தவில்லை என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அவரது கருத்துக்களில் சமஸ்டி கோரிக்கை, ஏக்கிய ராச்சிய தீர்வு யோசனை நிராகரிப்பு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் என்பனவே முக்கிய விடயப் பொருட்களாக இருந்தன.

தமிழக மீனவர்களின் அத்துமீறல் விவகாரம் தமிழ்நாட்டிற்கும், தாயகத்திற்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் கையாளப்படுகின்றது என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.
ஈழத் தமிழருக்கு சார்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடையச் செய்யும் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு. இந்த வகையில் டெல்லியை கையாள்வதற்கான திறவு கோல் தமிழ்நாடு தான் என 2006 இலேயே ஆய்வாளர் திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார்.

இக்கட்டுரையாளர் சென்னையில் இந்தியா கம்யூனிஸ்ட்கட்சி தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான மகேந்திரனை சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் சந்தித்தபோது அவர் இதனையே கூறியிருந்தார். “நீங்கள் நேரடியாக மத்திய அரசினை கையாளாதீர்கள் தமிழ்நாட்டினூடாக கையாளுங்கள்” எனக் கூறியிருந்தார். “ஒரு தடவை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தமிழ்நாட்டின் விருப்பத்திற்கு மாறாக கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றச் சென்ற போது ஈழத் தமிழர் ஒடுக்கப்படுவதனை சுட்டிக்காட்டி நாம் தடுத்து நிறுத்தினோம்” எனவும் அவர் கூறி இருந்தார்.

ஈழத் தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் கொண்ட புவியியல் அமைவிடமாகும். புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மட்டுமல்ல தமிழ்நாடும் கேந்திர இடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் தமிழர் தாயக கேந்திர ஆற்றலை விட உயர்வானது ஏனெனில் அதற்கு பின்னே மிகப்பெரிய நிலத் தொடர்ச்சி இருக்கின்றது. இந்திய மத்திய அரசுக்கு மட்டுமல்ல புவிசார அரசியலில் அக்கறை கொண்ட வல்லரசுகளுக்கும் தமிழ்நாடு இது விடயத்தில் முக்கியமானதாக உள்ளது.

இரண்டாவது தமிழ்நாட்டின் சனத்தொகையாகும். சுமார் 7 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இது இலங்கையிலுள்ள சனத்தொகையை விட ஐந்து மடங்கு அதிகமானதாகும். தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் இணைந்தால் இந்தியாவில் வசிக்கும் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 8 கோடியையும் தாண்டும். தவிர தமிழக வம்சாவளித்தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் எழுச்சி அவர்களையும் ஈழத் தமிழர்கள் பால் அக்கறைப் பட வைக்கும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மலையக தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகமெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்கள் நல்ல சேமிப்புச் சக்திகளாவர். நாம் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருப்பதினால் இச் சேமிப்புச் சக்திகள் எப்போதும் நமக்கு துணையாக நிற்கும்.

மொறீசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கின்ற அக்கறைக்கு சான்றாகும்.

மூன்றாவது தமிழ்நாடு வரலாற்று ரீதியாக மைய நீரோட்ட அரசியலுக்கு வெளியில் நிற்கின்றமையாகும். திராவிட கருத்து நிலை கொண்ட அரசியலே இதற்கு பிரதான காரணமாகும். தமிழ்நாட்டில் இன்று ஆதிக்கம் செலுத்தும் இரு பிரதான கட்சிகளும் திராவிட அரசியல் மூலம் உருவான கட்சிகளே! இந்தக் கட்சிகளின் ஆதிக்கத்தை மைய நீரோட்ட கட்சிகளினால் சிறிதளவு கூட உடைக்க முடியவில்லை. இவ்வாறு மைய நீரோட்ட அரசியலிருந்து விலகி நிற்பது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு சார்பானதாகும்.தவிர தமிழ் மக்கள் இன்று நாள்தோறும் பச்சை ஆக்கிரமிப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.இதற்கு இடதுசாரி முகமூடி போர்த்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்பின் மையமாக இன்று விளங்குவது முல்லைத்தீவு மாவட்டம் தான். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும். தமிழ்நாடு இதில் பாரிய பங்களிப்பை ஆற்றக்கூடியதாக இருக்கும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி அழிக்கப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப் போராட்டம் தமிழ் நாட்டிலும் பரவத் தொடங்கியது. அப்போது தேர்தல் காலமாக இருந்தபடியால் இந்தியத் தூதுவர் உடனடியாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து உண்ணாவிரதத்தை நிறுத்தி நினைவுத்தூபியை மீளக் கட்ட அனுமதிக்குமாறு வேண்டினார். அதன் பின்னரே அரசாங்கம் அனுமதி வழங்க நினைவுத்தூபி மீளக் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றது.

இன்று பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இருக்கின்றது. டித்வா புயல் பேரிடரின் பின்னர் இந்தப்பிடி அதிகமாக இருக்கின்றது எனலாம், எனவே சென்னைக் கூடாக புதுடில்லிக்கு அழுத்தம் கொடுத்தால் சில விடயங்களை வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும். இன்று புது டில்லி தமிழ் மக்கள் தொடர்பாக பாராமுகமாக இருக்கின்றது என்றால் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.
இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற் கூடாக அணுகுவதை விரும்பப்போவதில்ல.அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணமாகும்.

ஈழத் தமிழர்களில் சிலரும்; தமிழ்நாட்டிற்கூடாக அணுகாமல் மத்திய அரசினை நேரடியாக அணுக வேண்டும் எனக் கூறப் பார்க்கின்றனர். நேரடியாக அணுகும் போது இந்திய மத்திய அரசிற்கு பலமான அழுத்தங்களை ஒருபோதும் கொடுக்க முடியாது. அண்மைக்கால தேக்க நிலைக்கு நேரடியாக அணுகியமையை காரணம் எனலாம். இன்று மாநில அரசுகள் மத்திய அரசில் பலமான செல்வாக்கை செலுத்துகின்றன. இதனால் ஏனைய மாநிலங்களையும் இணைத்து பயணித்தால் அழுத்தங்களை மேலும் பலமாக கொடுக்கக் கூடியதாக இருக்கும். கருணாநிதியின் ரெசோ அமைப்பை மீளவும் புதுப்பிப்பது இது விடயத்தில் ஆரோக்கியமான பயன்களை தரக்கூடியதாக இருக்கும். இன்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையின் இறைமை, ஆள்புலம்; பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம், சமூகநீதி பேணப்பட வேண்டும் என்று பெயருக்காகவாவது இருப்பது தமிழ்நாட்டின் அழுத்தங்களின் விளைவு என்றே கூற வேண்டும்.

தமிழ்த் தேசிய பேரவையின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு எதிர்வினைகளும் வந்துள்ளன. ஈழத் தமிழர்களில் சிலர் முன்னரும் கூறியது போல தமிழ்நாட்டுடன் பேசி பயனில்லை. மத்திய அரசுடன் தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இங்கு மத்திய அரசுடன் இதுவரை நேரடியாக பேசி எந்தவித முன்னேற்றத்தையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அழுத்தம் பலமாக இல்லாததே இதற்கு காரணமாகும். மத்திய அரசுடன் பேசத்தான் வேண்டும். அழுத்தம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டுடன் இணைந்து பேசுவதே ஆரோக்கியமானதாக இருக்கும்.
இரண்டாவது எதிர்வினை புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருந்து வந்துள்ளது. இது பற்றியும் முன்னர் கூறியிருக்கின்றேன். தமிழீழக் கோரிக்கை பலவீனமடைந்து விடும் என்பதே இதற்கு பின்னால் உள்ள நியாயப்பாடு ஆகும். தாயகத்தில் 6 வது திருத்தச் சட்டம் அமுலில் உள்ளது. தாயகத்தில் இருப்பவர்களினால் தமிமீழக் கோரிக்கையை முன்வைக்க முடியாது. தவிர இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முழு இலங்கைத் தீவும் தேவையாக உள்ளது. இதனால் இந்திய நலன்களையும் ஈழத் தமிழர் நலன்களையும் சந்திக்கின்ற புள்ளியை கட்டமைக்க முடியாது.

சமஸ்டிக் கோரிக்கையின் மூலம் நடுப்புள்ளியை கண்டுபிடித்து பலப்படுத்தலாம். தவிர தமிழீழக் கோரிக்கை தொடர்பாக ஒரு எழுச்சியை தமிழ் நாட்டில் கொண்டுவர புலம்பெயர் தரப்பினரால் முடியவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சியோடு அவர்களது அரசியல் சுருங்கிப் போயுள்ளது.மொத்தத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் பயணம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான பயன்களைக் கொண்டு வரலாம். இதற்கு தொடர் செயற்பாடுகள் தேவை. தமிழ்நாட்டில் ஒரு தொடர்பு அலுவலகத்தை உருவாக்குவது அவசியம்.


தமிழர் அரசியலில் பூகோள, புவிசார் அரசியல் பற்றி அதிகம் பேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் தான். அவரது அரசியலின் மையமே அதுதான். இதற்காக அவர் பல தடவைகள் கிண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்.இன்று தனது புவிசார் , பூகோள அரசியலை நடைமுறைச் செயற்பாட்டிற்கு கொண்டுவர அவர் முயற்சிக்கின்றார். அவரது முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை எதிர்கால வரலாறு தான் கூறக்கூடியதாக இருக்கும்.


எல்லாவற்றுக்கும் முதன்மையானது தாயகத்தில் பலமான, ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே! இதனை உருவாக்காமல் தமிழ் நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை.
தமிழ்த்; தேசிய சக்திகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்!

Exit mobile version